மலரும் முள்ளாகும்

மலரும் முள்ளாகும்

எல்லாம் முடிந்து விட்டது. அவள் பிரிந்து விட்டாள். கோர்ட் பிரித்து விட்டது. அவள் பிரிந்ததைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. ஆனால் அதற்காக அவள் எப்படியெல்லாம் பொய் சொன்னாள்? என்னென்ன பழியையெல்லாம் அவன் மீது சுமத்தினாள்? அதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

' மஞ்சு! நான் உனக்கு என்ன கொடுமை செய்தேன்? என்னை ஏன் இப்படி அவமானப் படுத்தினாய்? என்னை ஏன் வார்த்தைகளால் குதறினாய்? மஞ்சு மென்மையான உன் மனசுக்குள் இத்தனை வக்கிரமா? என்னைப் பழிவாங்க வேண்டும், கேவலப்படுத்த வேண்டும் என்று உனக்கு எப்படித் தோன்றியது. யார் இந்த விஷத்தை உன் நெஞ்சில் புகுத்தியது. தலை நிமிர்ந்து நடந்த என் முகத்தில் எச்சிலைத் துப்பி விட்டாயே? இனி நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த ஊருக்குள் நடப்பேன்?' விஸ்வம் வேதனையால் குமுறினான்.

விஸ்வம் திருமணத்தின் போதே மறுத்தான்"அவள் படிச்சவ. பட்டம் வாங்கியிருக்கா. ஆனால் நான் மழைக்குக் கூட பள்ளிக் கூடத்துப் பக்கம் ஒதுங்கினதில்ல. அவள் பட்டணத்துல வாழ்ந்தவ. நான் கிராமத்துல விவசாயம் பார்க்கிறவன் எனக்கும் அவளுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமில்லை மாமா...."

ஆனால் அப்பாவும், மாமாவும் தான் வற்புறுத்தினார்கள். "மாப்பிள்ளை மஞ்சு எனக்கு ஒரே பொண்ணு. என்னோட லட்சக் கணக்கான சொத்துக்கு அவதான் வாரிசு. முன் பின் தெரியாத எவனோ ஒருத்தன் கைல என் பொண்ணையும், பணத்தையும் கொடுக்க நான் விரும்பல. எனக்குப் பின்னால பணத்துக்கு ஆசைப்பட்டு என் மஞ்சுவுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா? மஞ்சு அம்மா இல்லாத பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன். அவகஷ்ட்டப்பட்டா என்னால தாங்க முடியாது. நீ என் தங்கச்சி மகன். உன் கைல அவளை ஒப்படைச்சிட்டா நான் நிம்மதியா போயிடுவேன்"

"அது சரி மாமா. மஞ்சுவை எனக்கு மட்டும் பிடிச்சிருந்தா போதுமா? அவளுக்கு என்னைப் பிடிக்கனுமே?"

"என் பொண்ணு நான் சொன்னா தட்டமாட்டா. அப்படியே உன்னை பிடிக்கலைனாக் கூட கழுத்துல தாலி ஏறிட்டா தானா பிடிச்சுப் போகும்"

அவனுக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. சாந்தி முகூர்த்தத்தின் போது, " மஞ்சு உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமில்லைனு எனக்குத் தெரியும். உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா சேர்த்து வாழ்வோம், இல்லைனா ஊரு உலகுக்கு கணவன் மனைவியா இருப்போம். நமக்குள்ள பிரிந்தே இருப்போம். நீயா விரும்பும் வரை உன்னை நான் தொடமாட்டேன்." என்றான்.

கோர்ட்டில் மஞ்சு

"என் தந்தையின் லட்சக் கணக்கான சொத்து தனக்குக் கிடைக்கும் என்பதற்காக எனது விருப்பத்தையும் மீறி, எனது தந்தையை மிரட்டி என்னை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டார்"

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் அவளோடு கல்லூரில் படித்த வெங்கட் வந்தான்.

"ஸாரி, மஞ்சு உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியல. அப்போ கப்பெனி விஷயமா பம்பாய் போயிருந்தேன். ஆமா! சிட்டில் இருந்த உனக்கு இந்த கிராமத்துல எப்படி பொழுது போகுது"

"இவர் காலைல நான் எழுந்திருக்கறதுக்கு முன்னாடி வயலுக்கு போனார்னா நான் தூங்கின பிறகு தான் வர்ரார்"

"அப்போ பகல்ல நீ சும்மா தானே இருக்கே. எங்க கம்பெனில ஒரு ஸ்டெனோ போஸ்ட் காலியா இருக்கு வந்து ஜாயின் பண்ணிடேன்"

அடுத்த வாரமே மஞ்சு கம்பெனியில் சேர்ந்தாள். தான் வேலைக்குப் போவது பற்றி அவள் விஸ்வத்திடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

விஸ்வம் " மஞ்சு தினமும் டவுனுக்கு பஸ்ல போய்ட்டு வர்ரது உனக்குக் கஷ்ட்டமா இருக்குமே" என்ற போது அவளிடமிருந்து "இங்க உட்காந்துக்கிட்டு ஓட்டறத விட இது ஒன்னும் எனக்குக் கஷ்ட்டமாயில்லே" என்ற சூடான பதில் வந்தது.

'தனியா வீட்ல கிடந்து அல்லாடரதுக்கு கொஞ்ச நாள் வேலைக்கு போய் வரட்டும்' என்று விஸ்வம் அவள் விருப்பத்திற்கு விட்டு விட்டான்.

'அவரோட குடிக்கும், சூதாட்டத்துக்கும்என்னோட சம்பளம் தேவைப்பட்டது. என்னை வற்புறுத்தி வேலைக்குப் போகச் சொன்னார். நான் மறுத்த போது குடித்து விட்டு வந்து அடித்த துன்புறுத்தினார். அதற்குப் பயந்து எனது கஷ்ட்டங்களையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்றேன்'

ஒரு நாள் இரவு யார் மோகத்தீயை அவளிடம் தூண்டி விட்டார்களோ? அவளாகவே வந்து வலிய அவன் மீது விழுந்தாள். விஸ்வம் அனைத்துக் கொண்டான். விளைவு அருண் பிறந்தான். இனி தங்களுக்குள் இடைவெளி குறையுமென்று விலகியே நின்றாள். அருண் பிறந்த ஒரு மாதத்திலேயே மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். குழந்தைக்கு முலைப் பால் கொடுக்க மறுத்தாள்.

விஸ்வம் அருணைத் தூக்கிக் கொண்டு வயலுக்குச் சென்றான்.

"பொம்பளை இப்படியும் இருப்பாளா? பச்சைக் குழந்தைய போட்டுட்டு அப்படி என்ன வேலைக்கு போக வேண்டியிருக்கு நமக்குத்தான் தரித்திரம் புள்ளையும், குட்டியும் தூக்கிக்கிட்டு வயலுக்குக் கூலி வேலைக்கு வர வேண்டியிருக்கு. இவளுக்கென்ன கொறைச்சல்"

"படிச்சவங்கற திமிர்தான். பாவம் நம்ம விஸ்வம் அந்த பட்டணத்து சிறுக்கிய கட்டிக்கிட்டு இப்போ சீரழியறான். கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு அவுகப்பா போய்ச் சேர்ந்துட்டாரு. இப்போ இவன் கொழந்தைய வச்சிக்கிட்டு அல்லாடறான்."

"ஏய் செல்லம்மா பாவம் அவரு தொட்டில் கட்ட முடியாம திண்டாடராறு போய் கட்டிக் குடுடி"

செல்லம்மா! மூன்று மாத கர்ப்பமாய் இருந்த போதே கணவனை பறிகொடுத்த அபாக்கியவாதி.

"யா குழந்தைய இந்தத் தொட்டில்ல படுக்கப் போடுங்க"

"செல்லம்மா அப்புறம் உங் குழந்தை?"

"அதை வரப்புல போட்டாக் கூட தூங்கும்க" என்றவள் தன் குழந்தையை துண்டை விரித்துப் புல் தரையில் படுக்க வைத்து விட்டு அருணை தொட்டிலிலிட்டுத் தாலாட்டினாள்.

குழந்தை தொட்டிலை நனைத்து விட்டு அழுதது. கூலிப் பெண்களோடு சேர்ந்து களையெடுத்துக் கொண்டிருந்த விஸ்வம் ஓடிவந்தான்.

குழந்தையை தொட்டிலிலிருந்து எடுக்கத் தெரியாமல் தவித்தான். கையைத் துடைத்துக் கொண்டு வந்த செல்லம்மா குழந்தையை எடுத்தாள். விஸ்வம் கொடுத்த பீடிங் பாட்டிலை வாங்கி குழந்தைக்குக் கொடுத்தாள். அது குடிக்காமல் முரண்டு பிடித்தது.

சட்டென்று ஜாக்கெட்டை விலக்கி குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டதும் குழந்தை அமைதியானான். பசியாறியதும் குழந்தை பொக்கை வாயைக் காட்டிச் சிரித்தான். விஸ்வம் எதுவும் புரியாமல் சிலையாக நின்றான். இந்நிலை ஒவ்வெரு நாளும் தொடர்ந்தது.

சில நாள் இரவு நேரங்களிலும் பாட்டில் பால் குடிக்காமல் அருண் முரண்டு பிடித்தான். மஞ்சு கவலையில்லாமல் நாவல் வாசித்தாள். விஸ்வம் குழந்தையின் பசியாற்ற வழி தெரியாமல் தவித்தான். பக்கத்து வீட்டிலிருந்த செல்லம்மா அவன் பசியாற்றி, தாலாட்டினாள்.

"மேலும் அவர் செல்லம்மா என்னும் இளம் விதவைப் பெண் ஒருத்தியுடன் தகாத உறவு கொண்டிருந்தார். இதை நான் தட்டிக் கேட்ட போது என்னை அடித்து, உதைத்தார். அதோடு பச்சிளம் குழந்தையை ஆத்திரத்தில் தூக்கி வீசினார். தெய்வாதீனமாக குழந்தை அன்று உயிர் தப்பினான். இனியும் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

இப்படிப்பட்ட ஒரு முரடருடன், குடிகாரருடன், பெண் பித்தருடன் என்னால் எப்படி வாழ முடியும்? எனக்குத் திருமண விலக்குத் தாருங்கள். நான் வேலை பார்த்து என் குழந்தையைக் காப்பாற்றுகிறேன். ப்ளீஸ்..... எனக்கு என் கணவரிடமிருந்து பிரிய அனுமதி தாருங்கள்" தேம்பித் தேம்பித் அழுதாள் மஞ்சு.

"மிஸ்டர் விஸ்வம் நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" நீதிபதி.

"இல்லை"

"அப்படியானால் இந்தப் பெண் சொல்வதெல்லாம் உண்மையா

" ...........................

மெளனம் சாதித்தான்.

கோர்ட் அனுமதி கொடுத்தது. பிரிவதற்கு

விஸ்வம் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடகூட பிடிக்காமல் படுத்திருந்தான். செல்லம்மா தான் அவன் அருகிலே அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மஞ்சு குழந்தையுடன் வந்தாள். கிராமமே அவளை எரித்து விடுவது போல் பார்த்தது.

"நானும் என்னோடு படிச்ச வெங்கட்டும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இந்தப் பேய் பெரிய இடைஞ்சலா இருக்குது. இரண்டு நாளா நிறுத்தாம அழுகுது. இதை நீங்கள் வச்சுக்கங்க"

"மஞ்சு இதுக்காகவா கோர்ட்டு வரைக்கும் போனே? உன்னோட காதலைப் பத்தி முன்னமே சொல்லியிருந்தா நம்ம கல்யாணத்துக்கே நான் சம்மதிச்சிருக்க மாட்டேன்.

உங்கப்பாவோட சாவுக்காகக் காத்திருந்து, இனி நம்மைத் தடுக்கிறதுக்கு யாருமில்லைங்கற எண்ணத்தோட கோர்ட்டுக்குப் போனியே அப்போ என் கிட்ட சொல்யிருந்தாக் கூட நானே விடுதலைப் பத்திரத்துல கையெழுத்துப் போட்டுக் குடுத்திருப்பேனே. நான் உன்னை இந்த கிராமத்துக்குக் கொண்டு வந்து உன்னோட வாழ்க்கைய பாழாக்கிட்டேன்கற ஒரே காரணத்துக்காக, என்னை அவமானப் படுத்தக் கோர்ட்டுக்குப் போனியா மஞ்சு"

"ஆமா, நான் எப்படி ஒரு வருசமா நரக வாழ்க்கைய அனுபவிச்சேனோ அது போல நீங்களும் அனுபவிக்கனும் அதுக்காகத்தான் கோர்ட்டுக்குப் போனேன்"

"அடிப்பாவி கட்டின புருஷன கேவலப்படுத்தனும்னு எந்தப் பொண்ணாவது நினைப்பாளா" செல்லம்மா பதறினாள்.

"! நீ இங்கதான் இருக்கியா? அப்போ நான் கோர்ட்ல சொன்னதெல்லாம் நிஜம் தான் போலிருக்கு"

"உன்னைப் போல துணிய மாத்தற மாதிரி புருஷனை மாத்தற சாதி இல்லடி நாங்க. நீ சொன்ன மாதிரி நான் அவருக்குப் பொண்டாட்டி இல்லே .

ஆனா அவரோட குழந்தைக்கு இனி நான் தான் அம்மா" என்றவள் மஞ்சுவிடமிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டாள்.

"இதுக்கு அம்மான்னா என்ன? அவருக்கு பொண்டாட்டினா என்ன? எல்லாம் ஒன்னுதானே"

"உன்னைப் போல நிறையப் படிச்சிட்ட பொண்ணுகளுக்கு இதெல்லாம் புரியாது. சீக்கிரமா இடத்தைக் காலி பண்ணு. இல்லைனா ஊர் மொத்தமும் சேர்ந்து உன்னை அடிச்சே கொன்னுடும்"

முகம் வெளிரிப் போன மஞ்சு வெளியேரினாள். இது வரை அழுது கொண்டிருந்த அருண் அந்த இதமான அரவணைப்பில் அமைதியானான்.

 

https://goo.gl/NxVSuY


03 Jun 2013

' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.

10 Apr 2013

சார்! கார்த்துடைக்கனுமா?

07 Apr 2013

மலரும் முள்ளாகும்

06 Mar 2013

கைக்காசு,,,-விமலன்

19 Jul 2012

பரவால்ல விடுங்க பாஸூ… - சதங்கா

19 Jul 2012

இடுகாடு - -நிலாரசிகன்.

12 Mar 2012

நீ, நான், நேசம் - எம்.ரிஷான் ஷெரீப்

02 Feb 2012

நம்பிக்கை இல்லாத நட்பு - ஈஸ்வர்

15 Jan 2012

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - எம்.ரிஷான் ஷெரீப்

27 Dec 2011

மைனர் - ரேகா ராகவன்